For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"வாரிசு அரசியலில் கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்" ; வானதி சீனிவாசன்!

01:13 PM Apr 07, 2024 IST | Mari Thangam
 வாரிசு அரசியலில் கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்    வானதி சீனிவாசன்
Advertisement

வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் தேதி நெருங்க, நெருங்க திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இந்தியாவில் அரசியல் அதிகாரம்தான் உண்மையான அதிகாரம். அரசியல் அதிகாரம் இருந்தால்தான், ஒருவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு வர முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேர், பெண்கள் 11 பேர் உள்ளனர். சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்கள் அதிகம் இருக்கும் மத்திய அமைச்சரவை பிரதமர் மோடியின் அமைச்சரவைதான்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையில் 34-வது இடம் அதாவது கடைசி இடம் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் கயல் விழிக்குதான்.

இதுதான் பெண்கள் வரலாற்றில் இமலாயப் புரட்சியா? ஆனால், 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் நிதியமைச்சராக பெண்ணை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் பெண்கள் வரலாற்றில் புரட்சி. இதுதான் உண்மையான சமூக நீதி. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை. இதுதான் பெண்கள் வரலாற்றில் இமாலயப் புரட்சியா?

பாஜக இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த கடந்த அரை நூற்றாண்டாக முயற்சி நடக்கிறது. 1989ல் பாஜக ஆதரவுடன் நடந்த மத்திய அரசுதான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. அதை நடைமுறைப்படுத்தாமல் பல ஆண்டுகள் தாமதம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

பெண்கள் பல சவால்களை சந்தித்து படித்து தனது திறமையால் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, நீதிபதிகளாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தால் அதற்கு திமுக உரிமை கொண்டாடுவது பெண்களை அவமதிக்கும் செயல். வாரிசு அரசியலில்கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல். கருணாநிதிக்கு இரு மகள்கள் இருந்தும் அதில் ஒருவர் அரசியலில் இருக்கும் மகன் ஸ்டாலின்தான் அடுத்த வாரிசாக முடிசூட்டப்பட்டார். ஸ்டாலினுக்கு மகள் இருந்தும் மகன் உதயநிதிதான் இளவரசாக முடிசூட்டப்பட்டு அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதுதான் பெண்கள் வரலாற்றில் இமாலயப் புரட்சியா?

திமுகவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அக்கறை இருந்தால், அவரது அமைச்சரவையில் குறைந்தது 10 பெண்களையாவது நியமிக்க வேண்டும். பெண்கள், தங்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

அவர்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருக்காமல் கொடுக்கும் இடத்திற்கு கொண்டுவர வேண்டும். அதுதான் பெண்கள் வரலாற்றில் உண்மையான புரட்சியாக இருக்க முடியும். அதைத்தான் பிரதமர் மோடி செய்துள்ளார்.

மோடியின் அடுத்த ஆட்சியில் பெண்கள் இன்னும் முக்கியப் பதவிகளில் இருப்பார்கள். திமுகவின் ஏமாற்று வேலைகளைக் கண்டு தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். இந்தத் தேர்தலில் தமிழக பெண்களின் ஓட்டு பிரதமர் மோடிக்கே!"என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement