For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வைகுண்ட ஏகாதசி!. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!.

Vaikunda Ekadasi!. Opening of Heaven's Gate in Srirangam Ranganathar Temple!. Devotees darshan with Govinda slogan!.
05:46 AM Jan 10, 2025 IST | Kokila
வைகுண்ட ஏகாதசி   ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு   கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
Advertisement

Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

Advertisement

இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வருவதுண்டு. வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதாசியில் விருந்தால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி இன்று (ஜன. 10) அனைத்து கோயில்களிலும் தொடங்கியுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. இந்த ஏகாதசி விரதம் 3 நாள் இருக்கக்கூடிய விரதமாகும். பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி 2025 விழாவை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதியான இன்று காலை 4 மணியளவில், ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. 108 திவ்யதேசங்களில் முதன்மை திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழா வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் இவ்விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. டிசம்பர் 31ம் தேதி முதல் பகல் பத்து விழா துவங்கியது. இவ்விழாவில் தினமும் உற்சவரான நம்பெருமாள் முத்தங்கி சேவையில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

ஜனவரி 09ம் தேதியுடன் பகல் பத்து திருவிழா நிறைவடைந்தது. பகல் பத்து திருவிழாவின் நிறைவு நாளில் நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில், மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெண்ணிற பட்டு, அலங்கரிக்கப்பட்ட நீண்ட ஜடை, பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து, கையில் தங்கக் கிளி ஏந்தி, கிளி மாலை அணிந்த படி பெண் கோலத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று (ஜனவரி 10) அதிகாலை 3 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, முத்துக் கொண்டை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடானார். அதிகாலை 4 மணியளவில் கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் கடந்து வந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று துவங்கி, அடுத்த 10 நாட்களுக்கு ஸ்ரீரங்கத்தில் இரா பத்து விழா நடைபெறும். தினமும் ஆயிரங்கால் மண்டபத்தில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிப்பார். ஜனவரி 10ம் தேதியான இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். பக்தர்கள் அதன் வழியாக சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யலாம். ஜனவரி 20ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் ஸ்ரீரங்கத்தில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.

Readmore: உடைந்த எலும்புகளை கூட ஒட்ட வைக்கும் அற்புத மருந்து; கட்டாயம் இந்த கீரையை வாரம் 1 முறை சாப்பிடுங்க..

Tags :
Advertisement