வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி..? எப்போது சாப்பிட வேண்டும்..? பெருமாளின் முழு அருளும் கிடைக்க இதை பண்ணுங்க..!!
பெருமாளுக்கே உரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டால், ஏராளமான பலன்களை பெற முடியும். பெருமாளின் அருளை பெறுவதற்கு ஏற்ற விரதமாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி. எனவே, வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டுமென்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்..
வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது 3 நாட்கள் இருக்கக் கூடிய விரதம். அதாவது தசமி திதியில் துவங்கி, ஏகாதசி திதியில் உபவாசமாக இருந்து, துவாதசி திதியில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வருகிறது. தசமி திதி நேற்று முடிந்த நிலையில், ஏகாதசி திதி ஜனவரி 10ஆம் தேதியான இன்று காலை 10.02 வரையும், துவாதசி திதி ஜனவரி 11ஆம் தேதியான நாளை காலை 08.13 மணி வரையும் உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஜனவரி நேற்றே பகல் பொழுதுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். ஜனவரி 10ஆம் தேதியான இன்று அதிகாலை 4 மணிக்கு பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை கண்டு தரிசித்த பிறகு, அன்று பகல் பொழுதில் தூங்காமல், உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.
ஜனவரி 10ஆம் தேதியன்று இரவு கண் விழித்து, ஜனவரி 11ஆம் தேதி காலை பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஜனவரி 11ஆம் தேதி காலை 08.13 மணியுடன் துவாதசி நிறைவடைந்து விடும். அதனால் அதற்கு முன்பாக அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்த்து சமைத்து பெருமாளுக்கு தாளிகை போட்டு, நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு நாமும் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி பாரணையில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். காலையில் பாரணை செய்து முழு உணவாக எடுத்துக் கொள்ள பிறகு பகலில் எளிமையான உணவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். அன்று மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகே விரதத்தை முழுவதுமாக நிறைவு செய்ய வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ விரதத்தை கடைபிடிக்கலாம். ஆனால், வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வே சொர்க்க வாசல் திறப்பு தான். அதனால், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, சொர்க்க வாசல் கடந்து வந்து நமக்கு அருள்பாலிக்கும் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் 3 நாட்களும் பெருமாளின் திருநாமங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.