Uttar Pradesh | 'ஜெய் ஸ்ரீ ராம்' எழுதினால் பாஸ்.!! உபி பல்கலைக்கழகத்தில் மோசடி.!!
Uttar Pradesh: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக தேர்வில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதிய மாணவர்களுக்கு 56 சதவீதம் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்திர பிரதேச(Uttar Pradesh) மாநிலம் பூர்வாஞ்சல் நகரில் அமைந்துள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் பார்மசி படிப்பில் தவறாக பதிலளிக்கும் மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக சர்ச்சை எழுந்தது . இதனைத் தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்களில் 18 பேரின் விடைத்தாள் வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் விடைத்தாள்களை பரிசோதித்துப் பார்த்தபோது நான்கு மாணவர்களின் விடைத்தாள் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் விராட் கோலி ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா என கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் விடைக்கு பதிலாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த மாணவர்களுக்கு 56 சதவீதம் மதிப்பெண் வழங்கி தேர்ச்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர் ஆளுநர் மாளிகைக்கு புகார் அளித்தார்.
அவரது புகாரை தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிய மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்கள் டாக்டர் அசுதோஸ் குப்தா மற்றும் டாக்டர் வினய் வர்மா ஆகியோர் மீது ஆளுநர் மாளிகையின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்திருக்கிறார்.