இரு மாநிலங்களிலும் முன்னிலையில் "பாஜக கூட்டணி"…! தற்போதைய நிலவரம் என்ன..!
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடந்துமுடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இதேபோல, வயநாடு மாநிலங்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அரசியல் வாழ்க்கைக்கே முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நவம்பர் 13 ஆம் தேதியும், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக கடந்த நவம்பர்20 ஆம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் முக்தி மோர்ச்சா, இந்தியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த தேர்தலில் ஹேமந்த் சோரனின் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வென்றது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 16 இடங்களில் வெற்றி பெற்றதால் கூட்டணி ஆட்சி அங்கு அமைந்தது. கடந்த தேர்தலில் பாஜகவை பொறுத்தவரை 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முதலவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைதாகி சிறைக்கு சென்றார். இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், இதனையடுத்து சம்பய் சோரன் முதல்வராக பதவி வகித்து வந்தார்.
சிறைக்கு சென்ற ஹேமந்த் சோரன் ஜூன் மாதம் ஜாமீனில் வெளியே வந்ததையடுத்து சம்பய் சோரன் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு மீண்டு முதலவாரானார் ஹேமந்த் சோரன். இதனால் விரக்தியடைந்த சம்பய் சோரன்4 ஜேஎம்எம் எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதன் காரணமாக ஜார்கண்ட் மாநில தேர்தல் மிக கவனமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
தற்போது இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை தற்போது நிலவரப்படி பாஜக கூட்டணியான "மகாயுதி கூட்டணி" 59 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கரஸ் கூட்டணியான "மகா விகாஸ் அகாடி" கூட்டணி 34 இடங்களில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்த வரை தற்போதைய நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
Read More: தக்காளி கிராண்ட் சேலஞ்ச்… மத்திய அரசு சார்பில் நிதியுதவி…! முழு விவரம்