Alert: இன்று இரவு 11.30 மணி வரை... மீனவர்கள், பொதுமக்கள் யாரும் கடலுக்கு அருகே செல்ல வேண்டாம்...!
கடல் அலை சீற்றம் அதிகரிக்கும் என நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடல்சார் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரி கடல் பகுதியில் 2.6 மீட்டர் உயரத்திற்கும், ராமநாதபுரத்தில் 3 மீட்டர் உயரத்திற்கும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கும் அலை எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலையின் இடைவெளியும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 13 முதல் 15 நொடிகளுக்கு இடையே ஒரு அலை எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. அலையின் சீற்றம் அதிகமாகவும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய கடல் சார் தகவல் மையம், மீனவர்கள் மற்றும் கடற்கரை பகுதிக்கு வரும் மக்கள் எச்சரிக்கை இருக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதே போல மற்ற கடலோர மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை :
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.