சரியாக மாலை 6.15 மணி... சென்னையில் ரயில் கட்டுமான பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு...!
சென்னை ஆதம்பாக்கம் அருகே கட்டுமானப் பணியில் இருந்த எம்ஆர்டிஎஸ் உயர்மட்டப் பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மனித உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும், எந்த சொத்துக்கும் சேதம் ஏற்படவில்லை என ரயில்வே தெரிவித்துள்ளது.
தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதைக்கு அருகில் ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் இரு தூண்களுக்கு இடையேயான மேற்பரப்பில் தண்டவாளம் அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென இரு தூண்களுக்கு இடையேயான பாலத்தின் மேற்பரப்பு பகுதியானது நேற்று மாலை 6.15 மணியளவில் இடிந்து விழுந்தது. 40 மீட்டர் நீளமுள்ள கர்டரை ஏவும்போது, ஒத்திசைக்கப்பட்ட ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி, தூக்கும் போது செயலிழந்ததால், தூண் ஒரு முனையில் நழுவியது. கிட்டத்தட்ட 80 அடி நீளமுடைய பாலத்தின் மேற்பகுதி அப்படியே இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக இடிந்து விழுந்த இடத்தில் பணிகள் ஏதும் நடக்காததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
பணிகளை தொடங்குவதற்கு முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சாலை போக்குவரத்தை மாற்றிய பின் வேலை செய்யப்பட்டதால் இந்த விபத்தில் உயிரிழப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு ரயில்வே அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.