"மக்களாட்சியா.? குடும்ப ஆட்சியா.?" உதயநிதி ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது! எடப்பாடி பழனிச்சாமி சூளுரை.!
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் நடைபெறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பாக 100 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். தாலிக்கு தங்கம் என்ற அம்மாவின் தங்கமான திட்டத்தால் 12 லட்சம் தமிழ் குடும்பங்கள் பலனடைந்ததாக தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த பல திட்டங்களை இந்த பொம்மை முதல்வர் செயல்படுத்த மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார் .
நீட் தேர்விற்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுகவின் ஆட்சி காலத்தில் தான் எனக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வந்ததால் மருத்துவக் கல்வியில் 2000 மாணவ மாணவியர்கள் பயனடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுக்கு கூட உருகும் வெல்லத்தை கொடுத்து மக்களை ஏமாற்றினர் என தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மன்னர் ஆட்சி போல செயல்படுகிறது எனக் கூறிய அவர் கலைஞருக்கு பின் அவரது மகன் மு க ஸ்டாலின் முதல்வராகி இருக்கிறார். அடுத்த தலைமுறையாக உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திமுகவினர் கனவு கண்டு வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்.