For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராமதாஸ் குறித்த அவதூறு பேச்சு.. முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்..!! - கொந்தளித்த அன்புமணி

Anbumani Ramadoss has issued a statement that Chief Minister M.K.Stalin should publicly apologize for his comments about Ramadoss.
03:38 PM Nov 25, 2024 IST | Mari Thangam
ராமதாஸ் குறித்த அவதூறு பேச்சு   முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்       கொந்தளித்த அன்புமணி
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருப்பது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் வினா எழுப்பிய போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கிறார். “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.” என்று கொந்தளித்திருக்கிறார். இதைக் கேட்டவுடன் இப்படி ஒரு முதல்வர் பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருக்கத் தேவையில்லை. அந்த அளவுக்கு ராமதாஸ் ஒன்றும் தவறாக எதையும் கேட்டுவிடவில்லை. “அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.” என்று தான் ராமதாஸ் வினா எழுப்பியிருந்தார். அது மிகவும் சரியானதே.

அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மானம் அமெரிக்காவில் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுமானால் எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவும் அரசியல் கட்சியின் நிறுவனராகவும் ராமதாஸுக்கு அக்கறை இருக்கிறது. அதனால் தான் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் தலைவர் அதானியும், அவரது புதல்வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்தும், அதானியுடனான சந்திப்பு அலுவல்பூர்வமானதா, தனிப்பட்ட முறையிலானதா? என்பது குறித்து தமிழக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது முதல்வர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் கடமை தானே?

அந்தக் கடமையைச் செய்வதற்கு மாறாக, ராமதாஸுக்கு வேலை இல்லை; அதனால் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்; அவருக்கெல்லாம் நான் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தைத் தான் காட்டுகிறது. அரசின் செயல்பாடுகள் பற்றி எழுப்பப்படும் வினாக்களுக்கு பதில் கூறாமல் இருக்க அவர் ஒன்றும் மறைந்த ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினும் இல்லை; தமிழ்நாடு ஒன்றும் அவர்களின் குடும்ப சொத்தும் இல்லை.

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளில் வெறும் 40 விழுக்காட்டினரின் ஆதரவை மட்டுமே பெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர் தான் ஸ்டாலின் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரம் நிரந்தரமானது அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.... ஒட்டுமொத்த உலகத்திலும் எங்களைக் கேள்வி கேட்க முடியாது? என்ற இறுமாப்பில் திளைத்தவர்களின் நிலை என்னவானது? என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து பதில் கூறித்தான் ஆக வேண்டும்.

ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுமானால் அதானிகளை ரகசியமாக சந்திப்பது போன்ற ஏராளமான வேலைகள் இருக்கலாம். ஆனால், ராமதாஸுக்கு மக்கள் நலன் குறித்து சிந்திப்பதும், அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவதும் தான் வேலை. அதைத்தான் அவர் செய்து வருகிறார். ராமதாஸ் மேற்கொண்ட பணிகளால் தான் தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகள் வென்றெடுக்கப்பட்டன.

அவர் செய்த வேலைகளால் தான் தமிழ்நாட்டில் 3321 மதுக்கடைகளும், தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளும் மூடப்பட்டன. அவர் மேற்கொண்ட பணிகளால் தான் 108 அவசர ஊர்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அவர் கொடுத்த அழுத்தத்தால் தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டது. அவர் கொடுத்த ஆதரவால் தான் 2006 ஆம் ஆண்டில் கலைஞர் முதல்வராக முடிந்தது; மு.க.ஸ்டாலின் முதல் முறையாக அமைச்சராக முடிந்தது.

ராமதாஸ், கருணாநிதியை கேட்டுக் கொண்டதால் தான் 2009ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக முடிந்தது. ராமதாஸ் கைகாட்டியதால் தான் மு.க.ஸ்டாலினின் தந்தை கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட முடிந்தது. அவர் நடத்திய போராட்டங்களால் தான் சென்னைக்கு வெளியில் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மக்களிடமிருந்து பறித்து துணை நகரங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் திமுக அரசின் கபளீகர திட்டம் தடுக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டுக்கு மு.க.ஸ்டாலின் அவர்களால் விளைந்த ஒரு நன்மையைக் கூற முடியுமா? பதவி வரும் போது பணிவும் வரவேண்டும், துணிவும் வர வேண்டும் என்பார்கள். மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதுவுமே வரவில்லை. இனியாவது பதவிக்கேற்ற பக்குவத்தையும், பணிவையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். ராமதாஸ் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். அதானி ஊழலில் மின்சார வாரியத்திற்கு உள்ள பங்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Read more ; B.Com பட்டதாரியா நீங்கள்..? கணக்காளராக சூப்பர் சான்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க!!

Tags :
Advertisement