"UAE -ல் இருப்பது தாய்நாடு போன்ற உணர்வை தருகிறது."! கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு பிரதமர் மோடி பேட்டி.!
ஐக்கிய அரபு அமீரக (UAE) நாடான அபுதாபியில் நடைபெறும் கோவில் திறப்பு விழா மற்றும் ஹலோ மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அபுதாபி புறப்பட்டு சென்றார். அபுதாபியைச் சென்றடைந்த பிரதமர் அமீரகத்தில் இருப்பது இந்தியாவில் இருப்பதைப் போன்று உணர்வதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமரை அமீரகத்தின் அதிபர் ஷேக் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு மரியாதை அணிவகுப்பம் கொடுக்கப்பட்டது. 35,000 முதல் 40,000 பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் ஹலோ மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
மேலும் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் வளைகுடாவின் மிகப்பெரிய இந்து கோவில் திறப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அபுதாபி நகரில் இருந்து துபாய் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வுகளுக்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி 2014 ஆம் வருடம் பிரதமராக பதவி ஏற்ற பின்பு ஏழாவது முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் வருவதாக தெரிவித்துள்ளார். இந்த ஒன்பது வருடங்களிலும் இந்தியா மற்றும் யுஏஇ இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகள் நாளுக்கு நாள் அதிக பிணைப்புடன் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.