இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. இரண்டு பெண்கள் உடல் நசுங்கி பலி..!!
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்தவர் நந்தினி, 33. கவரைப்பேட்டை, சம்பந்தம் நகரில் வசித்தவர் விஜயா, 53. இருவரும், பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், வாகன உதவியாளராக வேலை பார்த்து வந்தனர். நேற்று பள்ளிக்கு சென்ற இருவரும், மதியம் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கவரைப்பேட்டை அருகே, கீழ்முதலம்பேடு சந்திப்பில், பின்னால் வந்த டிப்பர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்த போது லாரி சக்கரத்தில் சிக்கியுள்ளனர். இதில் இரண்டு பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை காவல்துறையினர் உயிரிழந்த 2 பெண்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுனரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read more ; பூண்டு, வெங்காயத்தை இந்த முறையில் சமைக்காதீங்க.. இதய நோய் அபாயம் அதிகரிக்கும்..!! – ஆய்வில் தகவல்