ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்..!! காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஈவிகேஎஸ் மகன் சஞ்சய் சம்பத்..?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டுதான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி 2011இல் முதல் தேர்தலை சந்தித்தது. அப்போது, மறைந்த கேப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, களத்தில் செல்வாக்கு அதிகம் செலுத்திய காலம். இந்த தேர்தலில் தேமுதிகவின் விசி சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி 2-வது முறையாக 2016 சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது. இதில், அதிமுகவின் கேஎஸ் தென்னரசு வெற்றி வாகை சூடினார்.
2021ஆம் ஆண்டு 3-வது முறையாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். இவரது தந்தைதான் ஈவிகேஎஸ் இளங்கோவன். 2021 சட்டசபை தேர்தலில் திருமகன் ஈவெரா வென்று எம்.எல்.ஏ.வானார். ஆனால், அவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
இதனால் 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஈவிகேஎஸ் இளங்கோவனே களம் கண்டு வெற்றியும் பெற்றார். ஆனால், கடந்தாண்டு இறுதியில் உடல்நலக்குறைவால் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 4 ஆண்டுகளில் 2-வது முறையாக பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் சம்பத்..?
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குதான் வாய்ப்பு தர வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், கடந்த முறையே தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால், இம்முறை சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் போட்டுள்ளனர். இதனால், அவரே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
Read More : HMPV வைரஸ்: நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!