ரயில் பயணிகளே..!! இந்த நம்பரை கட்டாயம் நோட் பண்ணி வைங்க..!! தவறி விழுந்த செல்போனை ஈசியா மீட்கலாம்..!!
இன்றைய நவீன உலகத்தில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஒரு கம்ப்யூட்டரை போல பல தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும் என்பதால் அலுவல் ரீதியான சில ஆவணங்கள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை பல தரவுகளை செல்போனில்தான் நாம் சேமித்து வைத்திருக்கிறோம். செல்போன் திருடுபோனாலோ அல்லது தவறவிட்டு விட்டாலோ அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.
பலர் ரயில் பயணத்தின் போது ஜன்னல் அல்லது படியின் அருகே செல்போனை பயன்படுத்தியபடி வருவர் அல்லது இயற்கைக் காட்சியைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தபடி வருவார்கள். இதுபோன்ற சூழலில், ரயிலில் இருந்து செல்போன் தவறி கீழே விழுந்துவிட்டால், நமது மனநிலை எப்படி இருக்கும்? அடுத்து என்ன செய்வது என்றே தெரியாத அளவுக்கு நாம் குழம்பிப் போவோம் அல்லவா? சிலர் ரயிலை சங்கிலியை இழுத்து நிறுத்த முயல்வார்கள். ஆனால், அப்படி செய்வது புத்திசாலித்தனம் அல்ல. ஏனெனில், ரயில் உடனடியாக நிற்காது. நிச்சயம் 3 கிலோமீட்டர் தூரம் தாண்டிதான் நிற்கும். அத்தனை தூரம் நீங்கள் நடந்து சென்று உங்கள் செல்போனை கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியம். மேலும், சங்கிலியை இழுத்த குற்றத்திற்காக ரயில்வே போலீசார் உங்களுக்கு ஒரு பெரும் தொகையை அபராதமாகவும் விதித்து விடுவார்கள்.
அப்படியென்றால் என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? ரொம்பவே ஈஸியான நடைமுறைகளை பின்பற்றினாலே போதும். உங்கள் செல்போன் ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டால், நீங்கள் பதறாமல் விழுந்த இடத்தை நினைவில் வைக்கும் படி அருகில் உள்ள எலெக்ட்ரிக் கம்பத்தில் பதிக்கப்பட்டுள்ள நம்பரை நோட் செய்ய வேண்டும். ஒவ்வொரு கம்பியிலும் ஒவ்வொரு நம்பர் வழங்கப்பட்டிருக்கும். பின்னர், 139 என்ற எண்ணை தொடர்புகொண்டு அவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கும் ரயில், தற்போது எந்த இரு ஸ்டேஷன்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கிறது, ரயிலின் எண், ரயிலின் நீங்கள் அமர்ந்திருக்கும் பெட்டி மற்றும் இருக்கை எண், நீங்கள் தவற விட்ட பொருள் குறித்த தகவல்களை எல்லாம் தெரிவித்தால் அவர்கள் உங்களுக்கு உதவும் வகையில் நீங்கள் பொருளைத் தொலைத்த இடத்திற்கு அருகில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது அங்கு பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களைத் தொடர்பு கொண்டோ பொருட்களைத் கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள்.