ரயில் விபத்து..!! தண்டவாளத்தில் போல்ட்டுகளை கழற்றிய மர்ம நபர்கள்..? NIA விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் அக்.11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் தமிழ்நாட்டின் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் அக்.11ஆம் தேதி இரவு 8.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும், ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.
இந்நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சிக்னல் மாறி விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொன்னேரி ரயில் நிலையத்திலும் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளது.
இதேபோல ஜூலை 26, செப்டம்பர் 16, 21 ஆகிய தேதிகளிலும் தண்டவாளங்களில் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ள நிலையில், இது சதி வேலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த விசாரணை தொடர்பான அறிக்கை இன்னும் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.