நானியின் 'ஹிட் 3' படப்பிடிப்பில் சோகம்.. பெண் உதவி ஒளிப்பதிவாளர் மரணம்
நேச்சுரல் ஸ்டார் நானியின் 'ஹிட் 3' திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹிட் 3 படத்தின் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.ஆர்.கிருஷ்ணா (30) என்ற பெண் உயிரிழந்தார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் மூழ்கியது.
கே.ஆர்.கிருஷ்ணா ஒரு பெண் ஒளிப்பதிவாளராக சிறந்து விளங்க வேண்டும் என்ற கனவுடன் திரையுலகில் நுழைந்தார். டிசம்பர் 23ஆம் தேதி படபிடிப்பின் போது கே.ஆர்.கிருஷ்ணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அவரை ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நெஞ்சு தொற்று ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கிருஷ்ணா குணமடைந்து வருவதாக கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கே.ஆர்.கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். . கிருஷ்ணாவின் மரணம் ஹிட் 3 படக்குழு மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது சொந்த ஊர் கேராவில் உள்ள பெரும்பாவூர். அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.