பெரும் சோகம்: ரோஹித் சர்மா கண்ணீர் விடும் காட்சியை பார்த்த கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்தியா முக்கியமான போட்டியான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஒட்டுமொத்த 130000 ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வியால் ஆந்திர மாநிலம் திருப்பதி, துர்காசமுத்திரத்தைச் சேர்ந்த ஜோதி குமார் யாதவ் என்ற இந்திய கிரிக்கெட் ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தகவல்களின்படி, நேற்றைய தின இந்திய அணி தோல்வி அடைந்ததும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விடும் வீடியோக்களைப் பார்த்து ஜோதி குமார் யாதவ் நெகிழ்ந்துள்ளார். பிறகு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார், அதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததும், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட பலரும் துக்கத்தை அடக்க முடியாமல் வெளிப்படுத்தினர். இந்த தோல்வியால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.