Toll | 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!
சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்படுகிறது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் ரூ.45 முதல் ரூ.200 வரை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்படுகிறது. அதேபோல், சென்னை புறநகரில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையும், ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரையும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ’நாடக காதல்களுக்கு முற்றுப்புள்ளி’..!! ’பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம்’..!! பாமக தேர்தல் அறிக்கை..!!