சமத்துவத்திற்காக உழைத்த மகத்தான தலைவர்.. அம்பேத்கர் பற்றிய அறியாத பக்கங்கள் ஒரு பார்வை..!!
சமத்துவத்தை நோக்கிய பயணத்தில், இந்தியப் பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்ட அற்புதமான தலைவனின் நினைவு நாள் இன்று.
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ யார் ஒருவன் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறானோ அடுத்தவன் கண்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் என்பேன் என்றார் அம்பேத்கர். அவரது நினைவு நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு திரும்பி பார்க்கலாம்.
பெண்ணுரிமை : டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களின் சமத்துவத்துக்காக, இந்து நெறிமுறை மசோதாவை (Hindu Code Bill) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதன் நோக்கங்கள்: இந்துக்களிடையே இருக்கும் பல்வேறு திருமண முறைகளை ஒழித்து ஒருதார மணத்தை (Monogamy) சட்டபூர்வமாக்குவது. பெண்களுக்கு சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை தருவது. விவாகரத்து கோரும் உரிமை, விவாகரத்தான பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிப்பது. இந்த மசோதா, பெண்களுக்கு உரிய சமநிலையை அளித்து, மொத்த சமுதாயத்தையும் முற்போக்கான பாதையில் கொண்டு செல்வதற்கான, அவரின் சீரிய முயற்சியாகும்.
ஆனால்… இந்தப் புரட்சிகர மசோதா நிறைவேறவில்லை. கடுமையான எதிர்ப்பினால், அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்த மசோதாவை கைவிட்டார். வெறுப்படைந்த அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அப்போது மனச்சோர்வுடன் இந்தச் சொற்களை உதித்தார் அண்ணல்... “இந்து நெறிமுறை மசோதா, கொல்லப்பட்டது; புதைக்கப்பட்டது. அழுகையின்றி... அங்கீகாரமின்றி...” பெண்ணுரிமைக்காகப் போராடி, அதை அடையமுடியாத நிலைமையில் தன் கொள்கையில் உறுதியுடன், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகி, தன் எதிர்ப்பை பதிவு செய்தவருக்கு இன்றும் பெண்கள் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.
வேலை நேரம் குறைப்பு : டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் தொழிலாளர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார். 12 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக 1 குறைத்தார். மேலும், தொழிலாளர்களுக்கு, விடுமுறை, காப்பீடு, மருத்துவ விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படை தேவைகளை கொண்டுவந்தார்.
பேறு கால உதவி சட்டம் ; டாக்டர் அம்பேத்கர், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு, பேறுகாலத்தில் ஓய்வும், நிதியுதவியும் அளிக்க வேண்டும் என்று 1928-லேயே குரல் கொடுத்தவர். பம்பாய் சட்டப்பேரவையில் இதற்கான மசோதாவை கொண்டு வருவதிலும் முக்கிய பங்காற்றினார். இதன் விளைவாக, இந்தியாவிலேயே முதன்முறையாக பேறுகால உதவி சட்டத்தை, 1929-ல் பம்பாய் சட்டப்பேரவை இயற்றியது.
ஆண்களுக்கு இணையான ஊதியம் : டாக்டர் அம்பேத்கர், ஆண்களுக்கு இணையான ஊதியத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். வைசிராயின் செயற்குழுவில் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, முதன்முறையாக இந்தியாவில், தொழிற்சாலை வேலைகளில், பாலின வேறுபாடின்றி சமவேலைக்கு சமஊதியம் என்ற கொள்கையைக் கொண்டு வந்தார்.
விருதுகள் : அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் பி.ஆர். அம்பேத்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. டாக்டர் அம்பேத்கருக்கு இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, இவரது இறப்புக்குப் பிறகு 1990-இல் வழங்கப்பட்டது.
அம்பேத்கரின் சில பொன்மொழிகள் :
1. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே நான் மதிப்பிடுவேன்.
2. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
3. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தை போதிக்கும் மதமே எனக்குப் பிரியமானது
4. கற்றி, ஒன்றுசேர், புரட்சி செய்
5. மனதை பண்படுத்துவதே மனிதராய் வாழ்வதின் உச்சபட்ச இலக்கு
6. அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
7. மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
8. மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்.
9. வாழ்க்கை நீண்டதாக இருப்பதைவிட உன்னதமானதாக இருக்க வேண்டும்
10. இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை.. சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.
11. சட்டமும் ஒழுங்கும் தான் அரசியலெனும் உடலுக்கு மருந்து. உடல் நோய்வாய்ப்பட்டால் மருந்தைக் கொடுக்க வேண்டும்.
12. நான் என் தேசத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் அரசியல் சாசனத்தில் ஜனநாயகம், மதச்சார்பின்மை. பொதுநலம் இருக்கின்றது.
13. ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின் அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.!
14. ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
15. கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
Read more ; காங்கோவில் பரவும் மர்ம காய்ச்சல்.. இதுவரை 79 பேர் பலி..!! அறிகுறிகள் என்னென்ன?