For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று போகிப் பண்டிகை..!! ’காப்புக் கட்டு’ பற்றி தெரியுமா..? இது வெறும் சடங்கல்ல..!! தமிழனின் மருத்துவ அறிவு..!!

Our ancestors were the ones who, in those illiterate times, made science understandable to the common people through rituals.
07:58 AM Jan 13, 2025 IST | Chella
இன்று போகிப் பண்டிகை     ’காப்புக் கட்டு’ பற்றி தெரியுமா    இது வெறும் சடங்கல்ல     தமிழனின் மருத்துவ அறிவு
Advertisement

இன்றுடன் மார்கழி மாதம் முடிந்து நாளை முதல் தை மாதம் பிறக்கிறது. அறுவடை முடிந்து, மண்ணுக்கும், கால்நடைகளுக்கும் உழவர்கள் நன்றி தெரிவிக்கும் மாதம் தை.
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதாவது இன்று. இந்த நாளில், வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், தோரணத்துடன் தை மாதத்தை மக்கள் வரவேற்பார்கள்.

Advertisement

இந்த போகிப் பண்டிகையுடன் ’காப்புக் கட்டு’ என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டு என்பது இன்றைய ஆன்ட்ராய்டு தமிழனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது இதுவும் ஒரு சடங்கு என விரல் சொடுக்கில் இணைய உலகத்திற்குள் உலா போய்விடலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறை இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பறிவு இல்லா அந்தக் காலத்தில் அறிவியலைச் சடங்குகள் மூலமாகவே பாமர மக்களுக்குப் புரிய வைத்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. காப்புக் கட்டில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும்.

காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகள் அரிதாகிவிட்டன. தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை இவை மூன்றும்தான் காப்புக் கட்டில் முக்கியமாக இடம்பெறுகின்றன. எத்தனையோ மூலிகைகள் இருக்க, இந்த மூன்றும் மட்டும் ஏன் இடம்பெறுகிறது தெரியுமா..?

ஆவாரை :

’ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என்கிறது சித்தர் பாடல். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை தான் ஆவாரை. இன்றைக்கு உலகை உலுக்கி வரும் சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வு தருகிறது ஆவாரம் பூ. கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வெயிலால் ஏற்படும் சூட்டைத் தணித்துக் கொள்ள தலையில் ஆவாரை இலையை வைத்துக் கொள்வார்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கிரீன் டீ யை விட அற்புதமானது ஆவாரை டீ.

கையளவு ஆவாரம் பூவை, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங் கருப்பட்டி கலந்து குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறு. சரும நோய்கள் பறந்து போகும். ஆவாரையை கல்லில் வைத்து ஒன்று இரண்டாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு, கண் வழியே வெளியேறுவதை உணர முடியும். உடல் துர்நாற்றத்தைத் விரட்ட, உடலை மினுமினுப்பாக்க, தலைமுடி வளர என ஆவாரையின் நன்மைகள் ஏராளம்.

ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால் உடல் சோர்வு, நா வறட்சி, நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய்கள் சரியாகும். ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். இத்தனை அற்புதங்கள் இருப்பதால்தான் ஆவாரையைக் காப்புக் கட்டில் இடம்பெற்றுள்ளது.

சிறுபீளை :

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி சிறுபீளைக்கு உண்டு. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்சனைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தார்கள் முன்னோர்கள்.

வேப்பிலை :

வேப்பிலை சிறந்த கிருமிநாசினி என்பது அனைவரும் அறிந்ததே. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது வேப்பிலை. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தான், காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் நம் முன்னோர்கள்.

காப்புக் கட்டு வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்று காப்புக் கட்டும் போது, அதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும்.

Read More : சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை..!! வனப்பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சல்கள் சுட்டுக்கொலை..!! தீவிர வேட்டையில் பாதுகாப்புப் படையினர்..!!

Tags :
Advertisement