தொடர் கனமழை..! கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...!
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுபெறக்கூடும். இது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். வடக்கு ஒடிசா–மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக நாளை இரவு கரையை கடக்கக்கூடும். அப்போது, அந்த பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். கனமழை காரணமாக கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.