இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை..! உங்க மாவட்டமும் இருக்கா..! முழு விவரம்..!
தமிழகத்தில் கனமழை காரணமாக மூன்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், இரண்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் என, 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று காலை) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.
மேலும், இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் எனவும் இதன் காரணமாக இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் இலங்கை - தமிழகத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த இரண்டு வாரத்திற்குப் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம், தேனீ மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கையால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.