குட் நியூஸ்...! இன்று காலை 9 முதல் 5 மணி வரை மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்...! முழு விவரம்
மாணவர்கள் கல்விக் கடன் பெற இன்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெறும் கல்விக் கடன் மேளாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெறவுள்ள கல்விக் கடன் மேளாவில் ஏற்கனவே கல்விக் கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக கல்விக் கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாக இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே வங்கிகளில் கல்விக் கடன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும், புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிடப்பட்ட கல்விக் கடன்களைப் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல் மற்றும் வருமான சான்று நகல் ஆகிய ஆவணங்களை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வரவேண்டும்.