ஒரு ஏக்கருக்கு ரூ.5,500 மானியம்... விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு... உடனே விண்ணப்பிக்கவும்
பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தீவன அபிவிருத்தித் திட்டம் மூலம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்கவும், கால்நடை வளர்ப்போரிடையே பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க செய்யவும் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை கால்நடை பராமரிப்பு துறை செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25ன் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட நிலத்தில் பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0.5 ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரை பரப்பளவில் தீவன சோளம் Co(FS)29 மற்றும் வேலி மசால் 3:1 என்ற விகிதத்தில் பயிரிடுவதற்கு 0.25 ஏக்கருக்கு ரூ.1,375/- முதல் ஒரு ஏக்கருக்கு ரூ.5,500/- மானியமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த சேலம் மாவட்டத்திற்கு 150 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீவன அபிவிருத்தி திட்டம் 2024-25ன் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு, நீர்ப்பாசன வசதி இல்லாத நிலத்தில் மானாவாரியாக பசுந்தீவன உற்பத்தி திட்டம் 0.5 ஏக்கர் நிலத்தில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம் மற்றும் தீவன தட்டைபயிர் பயிரிடுவதற்கு 0.5 ஏக்கருக்கு ரூ.1,500/- மானியமாக வழங்கப்படவுள்ளது. தீவன விரயத்தை குறைப்பதற்காக 210 எண்ணிக்கையிலான 2 HP திறன் கொண்ட மின்விசையால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50% மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள். குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும் இருக்க வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது. இத்திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள். பெண்கள் மற்றும் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தகுதி வாய்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் 28.10.2024-க்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.