வதந்திகளை நம்பாதீங்க.. Group 4 பணியிடங்கள் அதிகரிப்பு தொடர்பாக TNPSC விளக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் காலிப்பணியிடங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது. குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி 4 -2024- ல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு பதில் என்னவென்றால், 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2001-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
2024 ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுக்கான 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே 2024-ம் ஆண்டு குரூப் 4 தேர்வின் மூலம் சரசரியாக ஒரு நிதி ஆண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள் ஆக மொத்தம் 2172 காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பபப்பட உள்ளன. எனவே, சமூக வலைத்தளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பபடும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நிரப்பப்படுகிறது. ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1, குரூப் 4 பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு என்பதால், குரூப் 4 தேர்வை எழுத தேர்வர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக குரூப் 4 பணியிடங்கள் 10 ஆயிரம் வரையாவது அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.