இட்லியோட பூர்வீகம் தெரியுமா.!2000 ஆண்டு பழமையான வரலாறு தெரிஞ்சிக்கலாம் வாங்க.?
இட்லி என்பது தென்னிந்தியாவில் பிரத்தியேகமான காலை உணவாக இருந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் விருப்பமான பிரேக் ஃபாஸ்ட்டாக இருப்பது இட்லி. இந்த இட்லியை தென்னிந்தியாவின் பாரம்பரியமான உணவு மற்றும் அடையாளமாக இருந்து வந்தாலும் இதன் பூர்வீகம் இந்தியா கிடையாது என்றால் நம்ப முடிகிறதா.? இட்லி எங்கிருந்து வந்தது.? அதன் பாரம்பரியம் என்ன.? ஆகியவற்றைப் பற்றிய வரலாற்று செய்திகளை இங்கு அறிந்து கொள்வோம்.
நாம் சுவையாக ருசித்து உண்ணும் இட்லி இந்தோனேஷியாவில் தான் முதலில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனேசியர்கள் இட்லியை தங்கள் உணவாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதன் பிறகு தான் 17ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு இட்லி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் இது கெட்லி என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் லட்டுக்கு பதிலாக இட்லி பிரசாதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இட்லி தவிர அப்பம், வடை, சுய்யம் போன்றவை நமக்கு பிரசாதமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் விரைவிலேயே கெட்டுப் போய் விடுவதால் 1803 ஆம் ஆண்டிலிருந்து லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நாம் சுடும் இட்லி வெவ்வேறு பெயர்களில் இந்தியாவின் பல பகுதிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நாம் சுடும் இதே இட்லியை புளிக்காத மாவில் தயாரித்து டோக்ளா என்ற பெயரில் குஜராத்தில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இட்லி மாவுடன் சிறிது இனிப்பு சேர்த்து வட்டப்பம் என்ற பெயரில் கேரளாவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் சன்னாஸ் என்ற பெயரில் மங்களூரிலும் இட்லி சுடப்படுகிறது. இவ்வாறு பல பெயர்களில் வழங்கப்பட்டாலும் தமிழ்நாடு தான் என்றுமே இட்லிக்கு பாரம்பரியமான இடமாக இருக்கிறது.