தமிழகத்தில் வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்!. 2 நாட்களில் ஒருவரை பாதிக்கும் ஆபத்து!. தனித் தனி வார்டில் சிகிச்சை!. அறிகுறிகள் இதோ?.
Tick fever: திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களில் ஒருவரை காய்ச்சல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் தீவிரமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 61 வயதான பழனிசாமி என்பவர் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். பரிசோதனையின் முடிவில் அவருக்கு உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பழனிசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆண் ஒருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளி வருவதற்குள் அவர் உயிரிழந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு உண்ணி காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், மீண்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் ஆங்காங்கே பரவி வருவதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் பகுதியில் இப்போது இதுவரை 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்குள்ள வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணி காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் பகுதிகளிலும் உண்ணி காய்ச்சல் பரவல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு பாதிப்பு என்ற வீதத்தில் உண்ணி காய்ச்சல் பரவி வருவதாகச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். உண்ணி காய்ச்சலால் அனுமதிக்கப்படுவோருக்குத் தனி வார்ட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாதிப்பு கிராமங்களில் தான் அதிகம் உள்ள நிலையில், இதனால் கிராமங்களில் முகாம் அமைத்து நோய்த் தொற்றைக் கண்டறிந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்ணி காய்ச்சலை ஆங்கிலத்தில் கியாசனூர் வன நோய் (KFD) என்று அழைக்கப்படுகிறது. Hemaphysalis spinigera எனப்படும் உண்ணிகளால் இவை பரவும். பொதுவாகக் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தசை வலி, வாந்தி, தொண்டைப் புண் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.