For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என் தம்பி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமா? ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்!! பொங்கி எழுந்த சீமான்!!

07:50 AM May 15, 2024 IST | Baskar
என் தம்பி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமா  ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்   பொங்கி எழுந்த சீமான்
Advertisement

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கும், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் சோதனையிடும் காவல்துறையின் செயல்பாடு வெளிப்படையான அத்துமீறல். அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் சோதனை செய்வதெல்லாம் முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நடவடிக்கையை தவிர வேறொன்றும் கிடையாது. டெல்லி வரை சென்று ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், சாதாரண அவதூறு வழக்குக்காக அவரது வீட்டில் சோதனையும் செய்கிறது காவல்துறை. எதற்காக இந்த சோதனை? இது, அவரது குடும்ப உறுப்பினர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் பாதிக்காதா? சவுக்கு சங்கர் பேசியதற்கு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்ததே மிகப்பெரிய தவறு.

அப்படி இருக்கும்பட்சத்தில், இப்போது அவரது வீட்டில் சோதனை செய்வது பாசிச நடவடிக்கை கிடையாதா? ஊடகவியலாளர்கள் சித்திக் காப்பான், ராணா அய்யூப் ஆகியோர் மீதான அடக்குமுறைக்கு எதிராக பேசிய முதல்வர் ஸ்டாலின், அவரது ஆட்சியில் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதற்கு வெட்கப்பட வேண்டும். அதுபோல, அரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதும் கண்டனத்துக்குரியது தான். பெண் போலீஸார் குறித்த அவரது கருத்துகளுக்காக, ஏற்கெனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது போடப்பட்டிருக்கும் குண்டர் தடுப்புக்காவல் சட்டம் தேவையற்ற ஒன்றாகும். இது அவரை ஓராண்டு சிறையிலேயே முடக்கும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தையே பிரதிபலிக்கிறது. சமூக அமைதியை கெடுப்பவர்களையும், சமூகத்திற்கு தீங்கு செய்பவர்களையும், ஏராளமான குற்ற வழக்குகளைக் கொண்டவர்களையும் முடக்கவே குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவதூறு வழக்குகளுக்கும் குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்துவது வெளிப்படையான அதிகார முறைகேடு. இதனை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இத்தோடு, கோவை மத்திய சிறையில் நான் கொல்லப்படுவேன் என சவுக்கு சங்கர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சவுக்கு சங்கரின் கருத்தோடு முழுமையாக முரண்படும் அதே நேரத்தில், சிறைக்குள் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதை கடுமையாக எதிர்ப்பது நம் கடமை ஆகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. சவுக்கு சங்கரின் அரசியல் நிலைப்பாடுகளை கருத்தில்கொண்டு, காவல்துறையின் மூலம் நடக்கும் இக்கொடுங்கோல் செயல்பாடுகளை நாம் இப்போது அலட்சியப்படுத்தினால், நாளை இதேபோன்ற வதையும், தாக்குதல்களும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை கண்டித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் சீமான்.

எனவே, தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்று, அவர் மீது இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதான ஒடுக்குமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்" என சீமான் கூறியுள்ளார்.

Read More: ‘பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா..!

Advertisement