கோவை அருகே அறியப்படாத மிகச் சிறந்த 3 சுற்றுலா தலங்கள் ஒரு பார்வை.!
கோயமுத்தூர் என்றாலே நமது நினைவுக்கு வருவது டீ சர்ட் மற்றும் ரெடிமேட் தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் ஆகும். இது தமிழகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோயமுத்தூரை சுற்றி இருக்கும் சுற்றுலா தளங்கள் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஊட்டி மற்றும் வால்பாறை தான். ஆனால் இவற்றையும் தாண்டி பல சுற்றுலா தளங்கள் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் இருக்கின்றன அவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
கோவை குற்றாலம் : கோவை குற்றாலம் என்று அறியப்படும் இந்த நீர்வீழ்ச்சி சிறுவாணி ஆற்றின் நீர்வீழ்ச்சியாகும். இது கோவையின் மையப்பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்க இங்கு சுற்றுலா சென்று வரலாம். இருசக்கர வாகனங்கள் கார் மற்றும் பேருந்து ஆகியவற்றின் மூலம் காஞ்சிபுரத்திலிருந்து இந்த இடத்தை அடைய முடியும். காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதிகளும் இருக்கிறது. நமது வாகனத்தை சோதனைச் சாவடியில் நிறுத்திவிட்டு வனத்துறையினரின் வாகனத்தில் அருவிக்கு செல்ல வேண்டும். இதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கேத்தரின் நீர்வீழ்ச்சி : நீலகிரி மாவட்டத்தில் மற்ற இடங்களை விடவும் சாகச பயணத்தை விரும்புபவர்களுக்கு என ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அதுதான் கேத்தரின் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதன் பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தேயிலை தோட்டங்களின் வழியாக நடந்து செல்ல வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி வனப் பகுதிக்குள் இருப்பதால் அதிக குளிரை கொண்டிருக்கும். மேலும் இங்கு காலை 9 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.
ஆனைகட்டி: இந்த சுற்றுலா தளம் கோவையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. இந்த சுற்றுலா தளத்தை சுற்றிலும் பழங்குடியின மக்களின் கிராமங்கள் இருக்கின்றன. கோவையில் இருந்து குறைவான தூரத்திற்கு பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் இந்த இடத்திற்கு வரலாம். இங்கு நிலவும் மிதமான வானிலை மனதிற்கு அமைதியை கொடுக்கும். மேலும் இங்கு வானிலையும் மற்றும் பழங்குடியின கிராமங்களை தவிர வேறு எந்த சுற்றுலாத்தலங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.