பெரும் சோகம்...! ஐயப்ப பக்தர்கள் 3 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு...! 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
தெலுங்கானாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 3 பேர், கார் சுவர் மீது மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் இதுவரை 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 3 பேர், கார் சுவர் மீது மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சபரிமலையில் இருந்து குமிலி வழியாக திரும்பிய வாகனம் தேனி நோக்கி சென்று கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். வாகனம் தேவதானப்பட்டி அருகே சென்றபோது, வாகனம் சுவர் மீது மோதியதில், தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டம், கமலாபுரம், டிடிபி காலனியைச் சேர்ந்த பி.சுப்பையா நாயுடு, 55, நரசிமியா, 55, ராஜு, 54, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் இருவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.