சாலைகளில் அதிக விபத்து நிகழும் நேரம் இதுதான்..!! இந்த 3 மணிநேரம் ரொம்ப முக்கியம்..!! வெளியான ரிப்போர்ட்..!!
சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன், முக்கிய அறிவுரையையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க மத்திய அரசு எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சாலை விபத்துகளில் அநியாயமாக உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன.
தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள், புள்ளி விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2021-இல் இந்தியாவில் எத்தனை சாலை விபத்துக்கள் நடைபெற்றது என்ற விவரத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில், விபத்துக்கள் எந்த நேரத்தில் அதிகம் நடைபெற்றது என்ற தகவலையும் வெளியிட்டிருந்தது. அதன்படி, பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, 2021இல் நடைபெற்ற 4.12 லட்சம் விபத்துக்களில் பிற்பகல் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் மட்டும் 1.58 லட்சம் விபத்துக்கள் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைகளில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பது ஆபத்தாக இருக்கிறதாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 14,416 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஒருநாளைக்கு மட்டும் 422 உயிரிழப்புகள் சராசரியாக ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு என கணக்கிட்டால் 18 உயிரிழப்புகள் நடப்பதாகவும், அந்த ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்தியா முழுவதும், இந்த ஒரு வருடத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 4ல் 1 பங்கு விபத்துகள், மாலை 6 முதல் இரவு 9 மணிக்குள் நடந்திருப்பதாக கூறியுள்ளது. கடந்த 2022இல் நடைபெற்ற விபத்துக்கள் தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில், ”2022ஆம் ஆண்டில் 4,46,768 சாலை விபத்துகள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 90,663 விபத்துக்கள் பதிவாகியுள்ளது.
வேலை நேரம் முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வாகனங்களும், மாலையில் வெளியே செல்பவர்களின் வாகனங்களும் ஏற்படுத்தும் நெரிசல் காரணமாக இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களுக்கு பயணித்தவர்களில் விபத்துகளில் அதிகபட்சமாக பீகாரில் 2,995 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 686 பேரும், ஜார்க்கண்டில் 525 பேரும், தமிழ்நாட்டில் 506 பேரும் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.