கர்ப்பிணிகளே உஷார்!!! குறை பிரசவத்தில் குழந்தை பிறக்க இது தான் காரணம்..
ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 17ம் தேதியும் உலகக் குறை பிரசவ தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், குறை பிரசவத்திற்கான காரணங்கள், குறைபிரசவம் தொடர்பான இறப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 37 வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் போது அது குறை பிரசவம் எனப்படுகிறது. அப்படி குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், உடல் ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுவாக குறைபிரசவம், ஒரு பெண்ணிற்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கோளாறுகள் இருந்தால் குறைபிரசவம் ஏற்படும். கருப்பை அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகளும் கூட குறை பிரசவத்திற்கு காரணமாகும்.
அது மட்டும் இல்லாமல், இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருந்தால் குறை பிரசவம் ஏற்படும். மேலும், கருப்பையின் முன்கூட்டியே விரிவடையும் திறன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஹார்மோன் அளவை சீர்குலைக்கும் நிலை ஆகியவை குறை பிரசவத்தை ஏற்படுத்தும். தாயின் ஒரு சில பழக்க வழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பழக்கம், மோசமான ஊட்டச்சத்து மற்றும் போதிய மகப்பேறு பராமரிப்பின்மை ஆகியவையும் குறைபிரசவத்தை ஏற்படுத்தும். மேலும், தாயின் அதிக படியான மன அழுத்தமும் சில நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தும்.