தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ஃபிளாப் படம் இதுதான்.. இந்தியன் 2, கங்குவா அளவுக்கு கூட வசூல் இல்ல...
கடந்த சில ஆண்டுகளாகவே தென்ந்திய படங்கள் பான் இந்தியா படங்களாக மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. பாகுபலி 1, பாகுபலி 2 கேஜிஎஃப், RRR, புஷ்பா மற்றும் புஷ்பா 2 போன்ற பல தென்னிந்திய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்தத் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் பெரும் புகழைப் பெற்றது மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தென்னிந்திய நடிகர்களை பான் இந்தியா ஸ்டார்களாக மாற்றியது.
அந்த வகையில் கடந்த ஆண்டு தென்னிந்திய திரைப்படத் துறைக்கு முக்கியமான ஆண்டாக இருந்தது. சுகுமார் இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்று, பல சாதனைகளை முறியடித்தது.
இந்த ஆண்டு, பிரபல நடிகர் ஒருவர் நடித்த மற்றொரு பெரிய படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் புஷ்பா 2 போலல்லாமல், அது பார்வையாளர்களை ஈர்க்கத் தவறியது, மேலும் 10 நாட்களுக்குள், திரையரங்குகள் கிட்டத்தட்ட காலியாகிவிட்டன. இந்தப் படம் தோல்விப் படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அது வேறு எதுவும் இல்லை, கேம் சேஞ்சர் படம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் முதன்முதலாக இயக்கிய படம் தான் கேம் சேஞ்சர். தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அரசியல்-ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூ.450 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கேம் சேஞ்சர், ஒரு பெரிய தோல்விப் படமாக மாறியது, அதன் பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த படம் ரூ.151 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படங்களில் ஒன்றாக இது மாறி உள்ளது.
இந்தியன் 2, கங்குவா மற்றும் ராதே ஷியாம் ஆகிய படங்களை விட கேம்சேஞ்சர் படத்தின் பட்ஜெட் பன்மடங்கு அதிகம். ராதே ஷியாம் ரூ.200-350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது, மேலும் இது ரூ.165.18 கோடியை மட்டுமே வசூலித்தது. இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் ரூ.250-300 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் ரூ.151 கோடியை வசூலித்தது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கங்குவா படம் ரூ.106 கோடியை வசூல் செய்தது.
Read More : அதிகம் எதிர்பார்க்கப்படும் 6 படங்கள்..! தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் கனவு நனவாகுமா..?