உடல் ஆரோக்கியத்துக்கு இது தான் பெஸ்ட்..!! அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது..!! வீட்டிலேயே செய்வது எப்படி..?
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நம் முன்னோர்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான உணவுகளை சாப்பிட்டு வந்தனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில், கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. காரணம், நாம் சாப்பிடும் உணவு தான். சத்தில்லாத உணவு. வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து முழுதாகக் கிடைப்பது இல்லை.
இந்நிலையில், நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்தங்கஞ்சி குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமான காலை உணவு ரெசிபிகளில் ஒன்றாக இது திகழ்கிறது உளுந்து கஞ்சி. பொதுவாக பெண்களுக்கு பருவமடையும் போது கொடுக்கப்படுகிறது, ஏனெனில் இந்தக் கஞ்சி எலும்பு மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றை பலப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க செய்யும். உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் ரத்த சோகை தடுக்கப்படுகிறது.
நார்ச்சத்து கொண்டிருப்பதால் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் செய்கிறது. ஒரு கிளாஸ் கஞ்சி லேசான காலை உணவை நிறைவு செய்கிறது. இந்த உளுந்தங்கஞ்சியை, விரைவாக சுவையாக, ஆரோக்கியமாக எப்படி காய்ச்சுவது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கால் கப் வெள்ளை உளுத்தம் பருப்பை தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும், 4 கப் தண்ணீர், அரை கப் வெல்லம், 3 ஏலக்காய் பொடித்தது, கால் கப் புதிய தேங்காய், துருவியது.
செய்முறை :
உளுத்தம் பருப்பை கழுவி சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த பிறகு, உளுத்தம் பருப்பை வடிகட்டி, ஏலக்காய் சேர்த்து பிளெண்டரில் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைக்கவும். கடாயில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதனுடன் வெல்லம் சேர்த்துக் கரைக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, வெல்லம் கலந்த தண்ணீரை சிறு தீயில் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கட்டிகள் வராமல் இருக்க தொடர்ந்து கிளறி மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் சமைக்கவும். கஞ்சி போல் கெட்டியாகவும் மிருதுவாகவும் ஆனதும், தீயிலிருந்து இறக்கி, தேங்காய் துருவலை கஞ்சியில் சேர்த்தப்பின் பரிமாறவும்.
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்கிறது. எல்லாவற்றையும் காட்டிலும் பெண்களுக்கு இது அதிக நன்மைகளை உண்டாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.