’இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை’..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்த தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. மீதமுள்ள தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பித்தருவதாக 2021ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்நிலையில், ஆண்டுக்கு 13% வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித்தராமல் நடிகர் வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தை டிசம்பர் 15ஆம் தேதியும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை 2024 ஜனவரி 14ஆம் தேதியும் வெளியிட உள்ளதால், இரு படங்களையும் வெளியிட தடை விதிக்க கோரி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.