'முற்றும் சர்ச்சைக்கு முடிவு' மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்..!! - திருமாவளவன்
”தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும்” என்ற திடீர் அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.
திமுக கூட்டணியில் இருக்கும் போதே மதுவிலக்கு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நேரத்தில், ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியானது. இதனால் கூட்டணி கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது, போதை ஒழிப்பு மாநாட்டில் திமுகவின் 2 பிரதிநிதிகள் பங்கேற்பர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்மிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் விசிகவுக்கு எந்த விரிசலும் நெருடலும் இல்லை எனவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார். மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தல் அரசியலுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.