தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது..!! எத்தனை பேர் பங்கேற்பு..? காவல்துறையின் கேள்விகளுக்கு பதில்..!!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கான பதிலை பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் வழங்கினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக அனுமதி கேட்டு கடந்த 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புஸ்லி ஆனந்த் மனு அளித்திருந்தார். இந்நிலையில், காவல்துறை சார்பில் மாநாடு நடத்துவது தொடர்பாக 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பதிலை புஸ்லி ஆனந்த் இன்று வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல்துறை சார்பில் கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆலோசனை செய்து முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளனர். காவல்துறை அனுமதி கிடைத்தவுடன் மாநாட்டின் தேதியை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், காவல்துறையில் அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த சில தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பதிலில், மாநாடு நடத்தும் நேரம் - மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை எனவும், மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்றும் ஆண்கள் 30,000 பேரும், பெண்கள் 15,000 பேரும், முதியவர்கள் 5,000 பேரும் வருவார்கள். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் இருக்கை 500 என குறிப்பிடப்பட்டுள்ளது.