ஐஐடி மெட்ராஸ் & இஸ்ரோ இணைந்து நடத்தும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சி...!
ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்க உள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ) இணைந்து ‘திரவ- வெப்ப அறிவியல்’ ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையத்தைத் தொடங்கவிருக்கிறது. இந்த மையத்தை அமைப்பதற்கான தொடக்க நிதியாக ரூ.1.84 கோடியை இஸ்ரோ நிறுவனம் வழங்க உள்ளது.
இஸ்ரோவின் விண்கலம் மற்றும் ஏவுவாகனம் தொடர்பான வெப்ப மேலாண்மை ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையமாக இந்த மையம் செயல்படும். ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு கூறுகளின் வடிவமைப்பு, பகுப்பாய்வு, சோதனை தொடர்பாக ஏற்படும் வெப்பச் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும்.
இந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) டீன் பேராசிரியர் மனு சந்தானம், இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் டி.விக்டர் ஜோசப் ஆகியோர் நவம்பர் 11, 2024 அன்று கையெழுத்திட்டனர்.