For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஆளுநர் பதவி இருக்க கூடாது...! எம்.பி திருமாவளவன்

06:30 AM Feb 13, 2024 IST | 1newsnationuser2
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஆளுநர் பதவி இருக்க கூடாது      எம் பி திருமாவளவன்
Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும்.

மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். மத்திய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் மத்திய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. ‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்’ என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கவேண்டும் என ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார் .

Tags :
Advertisement