மகிழ்ச்சி செய்தி...! இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு கிடையாது...!
தமிழக அரசின் உத்தரவுப்படி, தேர்வுக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தும் முடிவை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்வுக் கட்டண திருத்தத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுகலை தேர்வு கட்டணம் ரூ. 450 ரூபாயில் இருந்து 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல்களுக்கான கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஜி லாக்கரில் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் டிஜிட்டல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான ஆன்லைன் சேவைக் கட்டணமும் ரூ.1,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு செமஸ்டருக்கான தேர்வு கட்டணம் உயர்த்தபடாது எனவும் வரக்கூடிய ஆண்டு முதல் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிப்பதற்காக துணைவேந்தர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தாள்கள், வினாக்களை அச்சிடுதல், விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல் போன்ற பொருட்களின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.