Monkey Pox: இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் பாதிப்பு..? மத்திய அரசு விளக்கம்...!
இந்தியாவில் குரங்கம்மை (MPOX) பாதிப்பு எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு ஆப்ரிக்க கண்டத்திற்கு வெளியே முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல அண்டைய நாடான பாகிஸ்தானிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் குரங்கம்மை (MPOX) பாதிப்பு எதுவும் இல்லை. குரங்கம்மை MPox பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
அறிகுறிகள்...
காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம் தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகும்.
பாதிப்பு அறிகுறி: கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகும்.
அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் இவர்களுக்கு தான் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.