உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்!… முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா மோதல்!
World Cup T20: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதுகின்றன.
ஐசிசி சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இன்றுமுதல் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்படுகிறது.
ஏ பிரிவில் இந்தியா, கனடா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, சி பிரிவில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், பப்புவா நியூகினியா, உகான்டா, டி பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை, தென்ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்றில் மொத்தம் 40 போட்டிகள் நடக்கிறது.
சூப்பர் 8 சுற்றில், ஏ மற்றும் சி பிரிவில் முதலிடம், பி மற்றும் டி பிரிவில் 2ம் இடம் பிடிக்கும் அணிகளும், குரூப் 2 பிரிவில் ஏ மற்றும் பி பிரிவில் 2வது இடம், பி மற்றும் டி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிகள் இடம்பெறும். இதில் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 27 நாட்களில் 55 போட்டிகள் நடைபெற உள்ளது.
அரையிறுதி போட்டிகள் ஜூன் 27ம் தேதியும், இறுதி போட்டி 29ம் தேதி பிரிட்ஜ்டவுன் மைதானத்திலும் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று 2 போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி இன்றுகாலை 6 மணிக்கு டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு வெஸ்ட்இண்டீசின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், பப்புவா நியூகினியா அணிகள் மோதுகின்றன. இதேபோல் வரும் 5ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. உலக கோப்பை போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இலவசமாக பார்க்கலாம்.
Readmore: ரமல் புயலின் கோரத்தாண்டவம்!… 3.5 லட்சம் பேர் பாதிப்பு!… இதுவரை பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு!