மீண்டும் வேகமெடுத்து வரும் வைரஸ்... கருவுற்ற பெண்களை தான் அதிகம் பாதிக்கும்...!
ஜிகா வைரஸ் பாதிப்பு மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என மத்திய அரசு கடந்த மாதம் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களில் புனேவில் மட்டும் 66 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்ட 26 கர்ப்பிணிகள் நலமாக உள்ளனர்.
டெங்கு, சிக்குன்குனியா போன்று ஜிக்கா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் வைரல் நோயாகும். இது உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றாலும், கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கருவுற்ற பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு குஜராத்தில் முதலாவது ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது.