திருப்பதி லட்டு விவகாரம்.. அதிகாலை 2 மணிவரை ரெய்டு நடத்திய அதிகாரிகள் குழு..!! சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திற்கு, நேற்று சனிக்கிழமை (நவம்பர் 23)உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த அலுவலர் உள்பட 14 பேர் கொண்ட ஆந்திர குழுவினர் சோதனை செய்ய வந்திருந்தனர். சோதனையின் முடிவில் பல ஆவணங்கள் மற்றும் உணவு மாதிரிகளை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தபடுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து லட்டு, குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில் நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஆந்திர அரசு லட்டு விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய அதிகாரிகள் மற்றும் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என 3 அதிகாரிகள் தலைமையில், 14 பேர் கொண்ட குழுவினர் நான்கு கார்களில், நேற்று - சனிக்கிழமை (நவ.23) பிற்பகல் 12 மணியளவில், திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகல் 12 மணியளவில் தொடங்கிய சோதனையை, இன்று (நவ.24) அதிகாலை 1.30 மணி வரை ஏஆர் டெய்ரி நிறுவனத்தில், சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆய்வு முடிவடைந்துள்ள நிலையில், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்கள், கணக்கு ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை ஆய்விற்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; தகாத உறவு.. கணவன், குழந்தையைக் கொன்று புதைத்த மனைவி..!! – 5 ஆண்டுகள் கழித்து தண்டனை விதித்த நீதிமன்றம்