இனி பணம் எடுக்க வங்கியில் காத்திருக்க வேண்டாம்..!! ரேஷன் கடைகளிலே எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கிராம புறங்களில் பலர் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாததால், ஒரு நாள் வங்கியிலேயே காத்திருந்து பணம் எடுக்கும் நிலை இருக்கிறது. மகளிர் உரிமை தொகை உள்பட அரசின் பல்வேறு மானிய தொகையை பெற பெண்கள் பலர், வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தமிழ்நாட்டில், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்வதுடன் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இயங்கும் ரேஷன் கடைகள் அனைத்தும் 'மைக்ரோ' ஏ.டி.எம்.களாக படிப்படியாக மாற்றப்பட உள்ளது.
எவ்வளவு பணம் எடுக்கலாம்? கூட்டுறவுத்துறைகள் சார்பில் இயங்கும் 34 ஆயிரத்து 567 ரேஷன் கடைகளிலும் 'மைக்ரோ' ஏ.டி.எம். வசதி கொண்டுவரப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்திலும் பொதுமக்கள் ஆதார் கார்டு மூலமாக பணம் எடுக்கலாம். ரேஷன் கடை ஏடிஎம்கள் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது எப்படி செயல்படுகிறது? எல்லா ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் என்ற கையடக்க கருவி இருக்கிறது. இந்த கருவி எப்படி செயல்படுகிறது என்றால், வங்கிக்கணக்கு வைத்துள்ள ஒருவர் கூட்டுறவு வங்கியின் ரேஷன் கடைகளில் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து தன்னை உறுதி செய்து கொள்ள வேண்டும், அவரது வங்கிக்கணக்கில் இருந்து அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை உள்ள தொகையை அவரது வங்கிக்கணக்கில் இருந்து கூட்டுறவு சங்க கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். அதன் பிறகு அந்த நபருக்கு பணம் வழங்கப்படும். இதற்காக, ரேஷன் கடை ஊழியர்களிடம் ரொக்கப்பணம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும். இந்த திட்டம் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்று கூட்டுறவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more ; சிகிச்சையின் போது இந்த 4 விஷயம் கட்டாயம்…! மத்திய அரசு அதிரடி உத்தரவு