அமைச்சர் குட் நியூஸ்...! அடுத்த ஆண்டு முதல் இவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்...!
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை அடுத்த ஆண்டுமுதல் உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500., மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் 4000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது.
தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022-2023-ம் ஆண்டில் உதவித்தொகை பெற தேர்வுசெய்யப்பட்ட 100 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘அடுத்த ஆண்டுஇந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். எல்லை காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் மரணம் அடையும்போது அவர்களின் ஈம செலவுக்கென ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த தொகையும் உயர்த்தி வழங்கப்படும். அதோடுவயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும் இத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.