அதிகரிக்கும் COVID... மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவு...!
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங்; கொரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் தொற்று பரவலை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றார்.
சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையால் ஏற்படும் சவாலைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனாவின் புதிய மற்றும் உருமாற்றத்திற்கு எதிராகத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார், குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொரோனா தொற்று ஒழியவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிய அவர் அறிகுறிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்யவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார், பிஎஸ்ஏ ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய மற்றும் மாநில நிலைகளில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாதிரி ஒத்திகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.