TN Fishermen Arrest : தொடரும் அட்டூழியம்.. மீண்டும் 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
நேற்று 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களிடமிருந்து விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக மீனவர்கள் கைதுக்கு தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நேற்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக இன்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியுறவு அமைச்சகத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதோடு, கச்சத்தீவை மீட்டு, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் என்பது தொடர்கதையாகி வருகிறது.
சில நேரங்களில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஆயுதங்களை கொண்டு தாக்குதல், வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர். இதனால், கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் மத்தியில் பாதுகாப்பின்மை தொடர்பான அச்சம் நீடித்து வருகிறது.