"இந்த தேசத்தின் ஆன்மா அழியாதது, தற்காலிக அரசியலால் இந்தியாவை அழிக்க முடியாது" - ஜாவித் அக்தர் உணர்ச்சிப்பூர்வமான பேட்டி.!
மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் ஒன்பதாவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்திய சினிமாவின் பலம் பெறும் பாடல் ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவித் அக்தர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் சினிமா எல்லோரா குகை ஓவியங்கள் மொழிகளின் முக்கியத்துவம் மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் மனம் திறந்திருக்கிறார் .
இது தொடர்பாக பேசியிருக்கும் ஜாவித் அக்தர் " இந்தியாவின் உண்மையான ஆன்மா அழியாதது. ஒரு சில தேர்தல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளால் இந்தியாவின் பழமையான கலாச்சாரத்தை அழிக்க முடியாது. இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம் தான் அதன் உண்மையான முகம் என தெரிவித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் 60கள் மற்றும் 70களில் வந்த சினிமாக்களில் ஹீரோக்கள் ரிக்ஷா இழுப்பவர்களாகவும் டாக்ஸி டிரைவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். மேலும் அந்தக் காலகட்டத்தில் ஹீரோக்கள் அடக்கமான குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.
இதனால் அன்று வந்த கதைகளில் சமூக முன்னேற்றம் அரசியல் மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்கள் அதிகமாக இருந்தது. இன்றைய சினிமாக்களில் ஹீரோக்கள் பணக்காரர்களாக காட்டப்படுகிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்கையை சுற்றியே கதைக்களம் நகர்வது போல் அமைக்கப்படுவதால் சமூக மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. இது சினிமாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய மிகப்பெரிய ஒரு மாற்றம் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் மொழி என்பது நாம் ஒருவரோடு உரையாடுவதற்கான கருவி மட்டுமல்ல அது நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டோடு தொடர்புடையது என்பதையும் வளரும் தலைமுறை உணர வேண்டும் எனவும் தெரிவித்தார் .
எல்லோரா குகை ஓவியங்களை பார்வையிட்டது குறித்து பேசிய அவர் எல்லோரா குகை ஓவியங்கள் மெய் மறந்து ரசிக்க வைக்கிறது. இதற்கு முன்பு ஏன் இவற்றை பார்வையிடவில்லை என என் மீது எனக்கே கோபம் ஏற்படுகிறது. கலையின் மீது கொண்ட தீவிர காதலால் இந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டு இருக்கின்றன. பணத்தை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கும் ஒருவரால் இது போன்ற கலைப்படைப்புகளை ஒருபோதும் உருவாக்க முடியாது. அவர்களிடம் இருக்கும் கலை மீதான காதலில் ஒரு சதவீதம் நம்மிடம் இருந்தால் கூட இந்த தேசத்தை சொர்க்கமாக மாற்ற முடியும் எனது தெரிவித்திருக்கிறார் ஜாவித் அக்தர்.