விசிக மாநாட்டில் பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை...! வைரலாகும் வீடியோ...
விசிக மாநாட்டில் பெண் காவலரை தொண்டர்கள் சிலர் இழுத்து தள்ளும் காட்சி வெளியாகிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.
மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 13 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாநாடு சிறிது நேரம் ஆரம்பித்த உடனே ஒரு பகுதியில் இளைஞர்கள் பட்டாளம் அதிகளவு கூடிக்கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் விசிக நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் அந்த இடத்தில் பெண்கள் காவல்துறை அதிகாரி சிக்கிக் கொண்டு பரிதவித்த நிலை ஏற்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற காரை வழிமறித்து சமூக ஒழுங்கை காக்க முயன்ற பெண் போலீசை விசிகவின் பெண் நிர்வாகிகளும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து அவரை இழுந்து தள்ளி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். விசிக தொண்டர்கள் பெண் காவல்துறையின் மேல் கையை வைத்து தள்ளிவிடும் காட்சி வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.