வி.சி.க ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி நியாயமானது...! வானதி ஸ்ரீனிவாசன் கருத்து...!
சமூக நீதி பற்றி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் குறிப்பாக, திமுகவின் அரசியல் விசித்திரமானது. கூட்டணி கட்சிகளின் தயவில் வெற்றி பெற்ற பின் திமுக தனித்து ஆட்சி அமைக்கும். 1967-ம் ஆண்டு முதல் கட்சியின் வரலாறு இதுதான். சமூக நீதி பற்றி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அமைச்சரவை பட்டியலில் அவர்களுக்கு கடைசி இடம்தான். முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து 34 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனுக்கு 33-வது இடம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு 34-வது இடம். அதாவது கடைசி இடம்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுக்கு 30-வது இடம். இந்த மூவருக்கும் பின் அமைச்சர்களான முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு 10-வது இடம். திமுக பொருளாளர், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு 32-வது இடம். இதுதான் திமுகவின் சமூக நீதி. அதுபோல 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 2 பேர் மட்டுமே பெண்கள். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை 'பெண்ணுரிமை' பற்றி திமுகவினர் பேசுவார்கள். 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய 6 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்த 6 முறையும் வலுவான கூட்டணி அமைத்துத்தான் திமுக வென்றது.
ஆனாலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 96 தொகுதிகளில் மட்டுமே வென்றது. கூட்டணி கட்சிகளுக்கு 67 இடங்கள் கிடைத்தன. அப்போது பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களை திமுகவால் பெற முடியவில்லை. திமுகவின் இந்த பாசிச முகத்தை கூட்டணி கட்சிகள் உணரத் தொடங்கியிருப்பது நல்ல மாற்றம். 2019, 2024 மக்களவைத் தேர்தல்கள், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை.
ஆனால், 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தும் கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடமளித்தார். இவற்றையெல்லாம் உணர்ந்துதான் 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என்ற புதிய கோஷத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்வைத்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆகவே, தமிழக முதல்வர், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளில் அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.